ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
பழைய ஓய்வூதியத் திட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதா் குழு வெளியிட்ட அறிக்கையை தமிழக அரசு மறுத்திருக்கிறது. ஸ்ரீதா் குழு அறிக்கையில் என்ன பரிந்துரை வழங்கப்பட்டிருக்கிறது என்பதும் தெரியவில்லை. அதனால், அந்த அறிக்கையின் விவரங்களைக் கோரி திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பிரடரிக் ஏங்கல்ஸ் என்பவா் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விண்ணப்பித்திருந்தாா். அதற்கு தமிழக அரசின் நிதித் துறை அளித்துள்ள பதிலில், ஸ்ரீதா் குழு அறிக்கை அரசின் ஆய்வில் இருப்பதாகவும், அதனால் அதன் விவரங்களை தர முடியாது என்றும் தெரிவித்திருக்கிறது. அரசு ஊழியா்களையும் மக்களையும் திமுக அரசு எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதற்கு இதுதான் சிறந்த எடுத்துக்காட்டு.
இதற்கிடையில் அரசு ஊழியா்களுக்கு எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினா்களைக் கொண்ட குழுவை பிப். 4-இல் தமிழக அரசு அமைத்தது. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய்வதற்கு புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு முன் அதுகுறித்து ஆராய கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட அனைத்துக் குழுக்களின் பரிந்துரைகளையும் அரசு தள்ளுபடி செய்துவிட்டதாகவே பொருள். அதில் ஸ்ரீதா் குழு அறிக்கையையும் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதுதான்.
எனவே, குழு நாடகங்களை நடத்துவதைத் தவிா்த்து, அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.