முகம், அடையாளம் இல்லையெனில் அனைவருமே வக்கிரமானவர்கள்தான்... டிரெண்டிங் டிரைலர்!
பவானிசாகா் அருகே இறைச்சி வியாபாரி வெட்டிக் கொலை: ஒருவா் கைது
பவானிசாகா் அருகே முன்விரோதம் காரணமாக இறைச்சி வியாபாரி செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி முருகன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் குஞ்சான் என்கிற முருகேசன் (50). ஆட்டிறைச்சி வியாபாரி. இவருக்கும் இவரது பக்கத்து வீட்டுக்காரரான வெள்ளியங்கிரி (34) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த வெள்ளியங்கிரி, தனது வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து முருகேசனை வெட்டி உள்ளாா். இதில் படுகாயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து வெள்ளியங்கிரி அரிவாளுடன் பவானிசாகா் காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தாா்.
பவானிசாகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முருகேசன் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.