கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா்: 9 போ் உயிரிழப்பு!
பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ விசாரணைக்கு உதவிய விடியோ! எடுத்தவர் யார்?
பஹல்காம் தாக்குதலில் புகைப்படக்காரர் எடுத்த விடியோ, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உதவிகரமாக அமைந்துள்ளது.
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து, மரத்தின்மீது ஏறி மறைந்துகொண்ட புகைப்படக்காரர், முழு சம்பவத்தையும் விடியோ பதிவு செய்துள்ளார். அந்த விடியோவைக் கொண்டு பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஊள்ளூரில் உதவியவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியிலுள்ள பைசாரன் பள்ளாத்தாக்கிலுள்ள சுற்றுலாத் தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப். 22) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும், 3 தமிழர்கள் உள்பட 17 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு தலைவர்கள் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
உதவிகரமாக அமைந்த விடியோ
தாக்குதல் நடந்த இடத்தில் கடந்த புதன்கிழமை முதல் முகாமிட்டுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுக்கள், பயங்கரவாதிகள் பைசாரன் பள்ளத்தாக்கின் புல்வெளிகளில் நுழைந்தது எப்படி? அவர்களுக்கு உள்ளூரில் உதவியவர்கள் யார்? என்பது போன்ற ஆதாரங்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணைக்கு அப்பகுதியைச் சேர்ந்த புகைப்படக்காரர் எடுத்த விடியோ பெரும் உதவியாக அமைந்துள்ளது.
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கியபோது அப்பகுதியில் இருந்த புகைப்படக்காரர், தன் உயிரைக் காத்துக்கொள்வதற்காக அப்பகுதியிலுள்ள மரத்தில் ஏறி மறைவாக அமர்ந்துள்ளார்.
எனினும், அப்பகுதியில் நடந்த முழு தாக்குதலையும் தன்னுடன் இருந்த கேமராவில் விடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த விடியோவைக் கொண்டு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அதில், இரு குழுக்களாக பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியது, அவர்கள் பதுங்கியிருந்தது, உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், சுற்றுலாப் பயணிகளிடமிருந்து தாக்குதலின்போது 2 செல்போன்களை பயங்கரவாதிகள் வாங்கியுள்ளனர். அந்தச் சம்பவமும் விடியோவில் பதிவாகியுள்ளன. அந்த செல்போன்கள் குறித்த தரவுகளைத் தேடும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
அந்த இரு செல்போன்களும் பிறகு பயன்படுத்தப்பட்டதா? எங்கு தொடர்பு துண்டிக்கப்பட்டது? என்ற கோணத்திலும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், சம்பவம் நடந்த இடத்தில் ஏகே - 47 மற்றும் எம் - 4 ரக துப்பாக்கித் தோட்டாக்களை உள்ளடக்கிய உறைகளை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். ஆப்கன் போர் முடிவுக்கு வந்த பிறகு, எம் - 4 ரக துப்பாக்கிகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயன்படுத்தத் தொடங்கியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதில், மேலும் ஏதேனும் தகவல்கள் கிடைக்கிறதா? என்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த விடியோவின் அடிப்படையில் பார்க்கும்போது, பயங்கரவாதிகளுக்கு உள்ளூர் தொழிலாளி யாரோ ஒருவருன் உதவி கிடைத்துள்ளதாகத் தெரிவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவரே பயங்கரவாதிகளுக்கு வழிகாட்டி கூட்டம் அதிகமுள்ள இடங்கள் குறித்து கூறியிருக்கக் கூடும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
இந்த விசாரணையில் தடயவியல் மற்றும் பிற நிபுணர்களின் உதவியுடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க | சிறுவாணி நீர்போல ஆட்சி... அண்ணாவை மேற்கோள்காட்டிப் பேசிய விஜய்!