பாகிஸ்தானில் வெள்ளத்தில் மூழ்கிய 3,100 கிராமங்கள்! 24 லட்சம் மக்கள் பாதிப்பு!
பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத மழையால், பஞ்சாபின் 3,100 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி, சுமார் 24 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பஞ்சாபில் பெய்த கனமழையாலும், அங்குள்ள முக்கிய நதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினாலும், அம்மாகாணத்தில் உள்ள 3,100-க்கும் மேற்பட்ட கிராமங்களும், 2,900 குக்கிராமங்களும் வெள்ள நீரில் மூழ்கின. இதனால், சுமார் 24 லட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, பஞ்சாப் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின், உணவு உற்பத்தியில் முதன்மையான பஞ்சாபில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், அந்நாட்டில் மிகப் பெரியளவில் உணவுத் தட்டுப்பாடு உருவாகக் கூடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
இந்நிலையில், செனாப் நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் அதிகரித்து, முல்டான் மாவட்டத்தில் உள்ள ரவி நதியில் இருந்து வெளியேறும் வெள்ளநீருடன் இணையக் கூடும் எனவும், கனமழையானது அடுத்த 2 நாள்களுக்கு நீடிக்கும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பஞ்சாபின் வடகிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அங்கு சுமார் 50 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன், ஏராளமான கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், தற்போது வரை பஞ்சாப் மாகாணத்தில் 100 முதல் 200 மி.மீ. அளவிலான மழை பெய்த நிலையில், அங்கு 164 பேர் பலியானதுடன், 582 பேர் படுகாயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆப்கன் நிலநடுக்கம் வெளியுலகுக்குத் தெரிய தாமதம் ஆனது ஏன்?