பாகிஸ்தானை புரட்டிப் போடும் கனமழையால் திடீர் வெள்ளம்! 116 பேர் பலி!
பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால், ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், அந்நாடு முழுவதும் சுமார் 116 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில், கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால், அங்குள்ள ஏராளமான நீர்நிலைகள் நிரம்பி கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மழை மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளினால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், பலியானவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளதாக, பாகிஸ்தானின் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், பஞ்சாப் மாகாணத்தில் அதிகப்படியாக 44 பேரும், கைபர் பக்துன்குவாவில் 37 பேரும், சிந்து மாகாணத்தில் 18 பேரும், பலூசிஸ்தானில் 16 பேரும் பலியாகியுள்ளனர்.
இதேபோல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஒருவர் பலியானதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் முழுவதும் சுமார் 253 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பஞ்சாப், கைபர் பக்துன்குவா மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களில் கனமழை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதினால், அங்குள்ள பகுதிகளுக்கு அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானில் ஜூன் முதல் செப்டம்பர் வரையில் பருவமழை நீடிப்பதால், மக்கள் நிரம்பிய பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான மக்கள் பலியாவது தொடர் கதையாகி வருகின்றது.
இதையும் படிக்க: டிரம்ப்பின் எதிர்ப்பை மீறும் ரஷியா! 400 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல்!