உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு: கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் அ...
டிரம்ப்பின் எதிர்ப்பை மீறும் ரஷியா! 400 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல்!
உக்ரைன் மீது ரஷியா ஒரே இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர்நிறுத்ததுக்கு, 50 நாள்களுக்குள் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும், இல்லையென்றால் ரஷியா மீது கடுமையானத் தடைகள் விதிக்கப்படும் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், உக்ரைனின் ஏராளமான நகரங்களின் மீது ரஷியா நேற்று (ஜூலை 15) இரவு முதல் இன்று (ஜூலை 16) அதிகாலை வரை கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷியா அக்கிரமித்துள்ள கிரிமியா பகுதிகளிலிருந்து, இஸ்காந்தர் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலமாகவும், சுமார் 400-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலமாகவும் உக்ரைன் நகரங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, உக்ரைனின் விமானப் படை தெரிவித்துள்ளது.
உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஸெலன்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி மற்றும் வின்னிடிசியா, கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்கா தலைமையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின், மூலம் தீர்வு எட்டப்படாத சூழலில், உக்ரைன் மீதான தனது கோடைக்காலத் தாக்குதல்களை கடந்த சில வாரங்களாக ரஷியா அதிகரித்துள்ளது.
இதனால், உக்ரைனுக்கு அதிகப்படியான வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க, நாட்டோ அமைப்பின் தலைவருடன் ஒப்பந்தம் மேற்கொள்வதாக, அதிபர் டிரம்ப் கடந்த ஜூலை 14 ஆம் தேதி கூறியிருந்தார்.
இத்துடன், 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, மத்தியஸ்தம் செய்ய தயார் என போப் பதினான்காம் லியோ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனாவுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை!