பாஜக கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.
திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட வடிவை திரும்பப் பெற வலியுறுத்தியும், ஆளுநரைக் கண்டித்தும், பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டையும் - தமிழ்மொழியையும் - தமிழினத்தையும் - காக்கும் காவல் அரணாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாங்கிப் பிடிக்க - தூணாகத் தூக்கி நிறுத்த - எத்தனையோ சார்பு அணிகள் இருக்கிறது! அதில் தனித்துவமானது நம்முடைய சட்டத்துறை! இது, வழக்கறிஞர்கள் அணி மட்டுமல்ல; கட்சியைக் காக்கும் காவல் அணி!
சோதனை நெருப்பாறுகள் பல கடந்து - அள்ளிவீசப்பட்ட அவதூறுகளை எதிர்கொண்டு - நாள்தோறும் கட்டமைக்கப்படும் பொய்களைத் தகர்த்தெறிந்து - 75 ஆண்டுகளாகக் கற்கோட்டையாகக் கட்சி நிமிர்ந்து நிற்கிறது; ஆறாவது முறை ஆட்சியமைத்து இருக்கிறது என்றால், அதற்கு லட்சக்கணக்கான கட்சி வீரர்களின் தியாகம்தான் காரணம்! அந்தத் தியாகங்களுக்கு துணை நின்ற வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள்தான் சட்டத்துறையைச் சார்ந்த நமது வழக்கறிஞர்கள்!
1975-இல் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டபோது, நான் உட்பட பலரும் ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டோம்! வெளியில் இருந்த கட்சித் தொண்டர்கள் பலரும் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டார்கள்! அவர்கள் அனைவரையும் பாதுகாத்தது சட்டத்துறைதான்!
இந்த மாநாடு வாயிலாக, நான் அனைவருக்கும் சொல்லிக் கொள்ள விரும்புவது, ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க.வை பொருத்தவரைக்கும், ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே பண்பாடு - ஒரே உடை - ஒரே உணவு என்று ஒற்றைப் பண்பாட்டை நோக்கி நாட்டை நகர்த்த பார்க்கிறது! அதற்காகத்தான் ஒரே தேர்தல் என்று கிளம்பியிருக்கிறார்கள். ஒரே அரசு என்ற நிலையை உருவாக்க மாநிலங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்!
பா.ஜ.க.வைப் பொருத்தவரைக்கும் பெரும்பாலும் குறுகிய கால செயல்திட்டமாக இருக்காது. நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும்! இப்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று சொல்பவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல்தான் என்று சொல்லும் நிலைமையை உருவாக்க நினைக்கிறார்கள். இது ஒற்றையாட்சிக்குதான் வழிவகுக்கும்! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இது, தனிமனிதர் ஒருவரிடம்தான் அதிகாரத்தைக் கொண்டு சென்று சேர்க்கும்! இது, பா.ஜ.க. என்ற கட்சிக்கே கூட நல்லதல்ல!
ஒரே நாளில் 8 இடங்களில் சங்கிலி பறிப்பு சம்பவங்களால் மக்கள் அச்சம்- கே. அண்ணாமலை
இன்றைக்கு பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியை சர்வாதிகாரியாக ஆக்கத்தான் இந்தச் சட்டம் பயன்படும்! பா.ஜ.க.வும் - பா.ஜ.க.வுக்கு மூளையாக இருந்து செயல்படும் அமைப்புகளும் விரிக்கும் வலையில், இன்று அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க.வை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள் விழுந்துவிடக் கூடாது. இந்தச் சட்டத்தை ஆதரிக்கக் கூடாது என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கோரிக்கை வைக்கிறேன். பா.ஜ.க. ஆட்சியை ஆதரிப்பது, உங்கள் தனிப்பட்ட விருப்பம்... ஆனால், இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலுக்கே முரணான சட்டங்களை, மக்களாட்சி மேல் நம்பிக்கை வைத்திருக்கும் எந்த அரசியல் அமைப்புகளும் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
2019 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு உங்களுடைய பணிகளும் முக்கியக் காரணம்! இந்த வெற்றிப் பயணம் 2026-லும் தொடர வேண்டும்!
2026 தேர்தல் வெற்றி என்பது, நம்முடைய திராவிட மாடல் ஆட்சிக்கு, மக்கள் அளிக்கப் போகும் மகத்தான அங்கீகாரமாக அமையப் போகிறது! திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மீண்டும் அமைய - இந்தியா முழுமைக்கும் திராவிடக் கோட்பாடுகளை வென்றெடுக்க - கட்சி சட்டத்துறை சளைக்காமல் - சமரசம் இல்லாமல் உழைக்க வேண்டும்! இவ்வாறு அவர் கூறினார்.