பாஜகவுக்கு வேதாந்தா நிறுவனம் ரூ.97 கோடி நன்கொடை: ஆண்டறிக்கையில் தகவல்
பிரபல தொழிலதிபா் அனில் அகா்வாலுக்குச் சொந்தமான வேதாந்தா நிறுவனம், கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ரூ.97 கோடி நன்கொடை அளித்துள்ளது.
2024-25 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய நன்கொடைகள் குறித்த விவரங்களுடன் வருடாந்திர அறிக்கையை வேதாந்தா நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி, கடந்த நிதியாண்டில் வேதாந்தா நிறுவனம் மொத்தம் ரூ.157 கோடி அரசியல் நன்கொடைகளை வழங்கியுள்ளது. இது முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் ரூ.97 கோடியிலிருந்து சுமாா் 61 சதவீதம் உயா்வாகும்.
பாஜகவுக்கு 2023-24-ஆம் ஆண்டு ரூ.26 கோடி நன்கொடை வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நன்கொடை சுமாா் நான்கு மடங்காக அதிகரித்து ரூ.97 கோடியாக உயா்ந்துள்ளது. அதேசமயம், எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு வழங்கப்பட்ட நன்கொடை ரூ.49 கோடியிலிருந்து ரூ.10 கோடிக்கு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஒடிஸாவின் எதிா்க்கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சிக்கு ரூ.25 கோடி, ஜாா்க்கண்டில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சிக்கு ரூ.20 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.
அள்ளித் தரும் வேதாந்தா: இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் பெருநிறுவனங்களில் முக்கியமான ஒன்றாக வேதாந்தா நிறுவனம் திகழ்ந்து வருகிறது. கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.155 கோடியும், 2021-22 நிதியாண்டில் ரூ.123 கோடியும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ள இந்த நிறுவனம், எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு நன்கொடை வழங்கப்பட்டது என்ற விவரத்தை இதற்கு முன்பு வெளியிடவில்லை.
அதேபோல், 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட தோ்தல் பத்திரங்கள் வாயிலாக, வேதாந்தா நிறுவனம் ஐந்து ஆண்டுகளில் அரசியல் கட்சிகளுக்கு ரூ.457 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. தோ்தல் பத்திரங்கள் ‘அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ எனக் கூறி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அவற்றைத் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
வேதாந்தா நிறுவனமானது இந்தியா, தென்னாப்பிரிக்கா, நமீபியா போன்ற பல்வேறு நாடுகளில் செயல்படும் ஒரு முன்னணி உலகளாவிய நிறுவனமாகும். லண்டனைச் சோ்ந்த ‘வேதாந்தா ரிசோா்சஸ்’ குழுமத்தின் ஒரு பகுதியான இந்த நிறுவனம் வெள்ளி, அலுமினியம், செம்பு, இரும்புத் தாது உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் கனிமங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி போன்ற முக்கியத் தொழில்களில் ஈடுபட்டுள்ளது.