பாஜகவை மிரட்டும் கர்ப்பிணிப் பெண்! யார் இவர்?
மத்தியப் பிரதேசத்தில் தங்கள் கிராமத்தில் சாலை வசதிகோரி புகார் அளித்த பெண், மத்திய அமைச்சரிடமும் முறையீடு செய்வதாக அம்மாநில எம்.பி.க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் சிதி மாவட்டத்தில் லீலா சாஹூ என்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது பயணங்கள், கிராமப்புற கலாசாரம், கண்காட்சிகள், அன்றாட வாழ்க்கை குறித்த விடியோ மற்றும் தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்ததன்மூலம், பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து, சமூகநலப் பிரச்னைகளையும் விடியோவாக பதிவிடத் தொடங்கினார்.
சமூகநலப் பிரச்னை தொடர்பான விடியோக்கள் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உள்பட மத்திய அமைச்சர்களையும் கேள்வியெழுப்பத் தொடங்கினார்.
இந்த நிலையில், தங்கள் கிராமத்தில் சாலை சரியில்லை என்றும், போதிய சாலை வசதி இல்லையென்றும் கிராம அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார். இருப்பினும், அவரின் புகார் தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

இதனிடையே, கர்ப்பிணிப் பெண்கள் இருக்கும் கத்தி - பகைஹா பகுதியில் சாலை வசதிகோரி விடியோ ஒன்றையும் சமூக ஊடகங்களில் லீலா பதிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, லீலாவின் புகார் விடியோவைப் பார்த்த பாஜக எம்.பி. ராஜேஷ் மிஸ்ரா, பெண்களின் பிரசவத் தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே பேருந்து வசதி செய்து தருவதாகக் கூறினார். இதனையடுத்து, தனது பிரசவ காலத்துக்குப் பின்னர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் நேரடியாகச் சென்று புகார் அளிப்பதாகவும் லீலா எச்சரிக்கை பாணியில் கூறியுள்ளார்.