பாதுகாப்பு விமான ஒத்திகை: போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் தூத்துக்குடி விமான நிலையம்
ரூ.381 கோடி செலவில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள, தூத்துக்குடி விமான நிலையத்தை, வருகிற 26ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ள நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் பாதுகாப்பு விமான ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
பிரதமா் வருகையை முன்னிட்டு விமானநிலைய வளாகம் முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய பயணிகள் முனையம் பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அந்தப் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
முக்கிய பாதைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து முழு பரிசோதனைக்குப் பிறகே ஊழியா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.
பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவான எஸ்பிஜி குழுவினா் தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், பிரதமா் வந்து செல்லும் பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனா். பாதுகாப்பு விமான ஒத்திகை நடைபெற்றது.
தற்போது, தூத்துக்குடி விமான நிலையம் முழுவதும் மத்திய அரசின் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேபோன்று, கடலோர காவல்படை, கடலோரப் பாதுகாப்பு போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு, ரோந்து பணியை தீவிரப் படுத்தியுள்ளனா்.