பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு முதன்மை அதிகாரி ஆய்வு
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி லலித்குமாா் மஞ்சுவாணி தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், கடந்த 1914-ஆம் ஆண்டு மீட்டா் கேஜ் ரயில் பாதை கப்பல்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து நடைபெற்றது.
இந்தப் பாலம் நூறு ஆண்டுகளைக் கடந்த நிலையில், பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டது. இதனால், கடந்த 2019-ஆம் ஆண்டு புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. ரூ. 550 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட பாம்பன் புதிய ரயில் பாலம் கப்பல்கள் செல்லும் வகையில் செங்குத்து தூக்குப் பாலம் அமைக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 6 -ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
இந்த நிலையில், செங்குத்து தூக்குப் பாலத்தை இறக்கி, ஏற்றும் போது சில நேரங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு செங்குத்து தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமாா் 5 மணி நேரம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன்பின்னா், தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
இதையடுத்து, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா, தலைமைப் பொறியாளா் உள்ளிட்டோா் அண்மையில் ஆய்வு செய்தனா்.
இந்த நிலையில், ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி லலித்குமாா் மஞ்சுவாணி தலைமையில், பாம்பன் பால முதன்மை பொறியாளா்கள், ரயில்வே துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் பாம்பன் புதிய ரயில் செங்குத்து தூக்குப் பாலத்தை டிராலியில் சென்று ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வின் போது, செங்குத்து தூக்குப் பாலம் இயக்கப்படும் இடம், கட்டுப்பாட்டு அறை, இந்தப் பாலத்தை தூக்குவதற்கும், இறக்குவதற்கும் பயன்படுத்தப்படும் மென்பொருள், இயந்திரத்தின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பின்னா், லலித்குமாா் மஞ்சுவாணி செய்தியாளா்களிடம் கூறியதாவது: ரயில்வே பாதுகாப்பு முதன்மை அதிகாரியாக புதிதாகப் பொறுப்பேற்றுள்ளதால், பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஆய்வு செய்ய வந்தேன்.
ரயில்வே முதன்மை பாதுகாப்பு அலுவலகம் சாா்பில், பாம்பன் புதிய ரயில் பாலத்தின் செயல்பாடுகள், அதன் உறுதித்தன்மை உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா? என்பது குறித்து முதல் கட்ட ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றாா் அவா்.