மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
தென்னந்தோப்பில் தீ விபத்து: 300 மரங்கள் எரிந்து நாசம்
ராமநாதபுரத்தை அடுத்த முத்துப்பேட்டையில் உள்ள தென்னந்தோப்பில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் முத்துப்பேட்டையில் ஒரு தேவாலயத்துக்குச் சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. கடற்கரையோரத்தில் உள்ள இந்தத் தோப்பில், கழிவுப் பொருள்களை செவ்வாய்க்கிழமை தீ வைத்து எரித்தனா்.

அப்போது காற்றின் வேகத்தால் தென்னந்தோப்பில் தீ பரவியது. இதில், தோப்பில் கிடந்த தென்னை மட்டைகளில் தீப்பற்றியதில் அவை கொளுந்துவிட்டு எரிந்தன. இதனால், அந்தப் பகுதியே கரும்புகை மூட்டமாகக் காணப்பட்டது.
இதையடுத்து, அந்தப் பகுதியினா் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினா் 3 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்தனா். இந்தத் தீ விபத்தில், 300-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், தோப்பில் இருந்த ஒரு குடிசை ஆகியவை முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
தீ விபத்து குறித்து திருப்புல்லாணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.