மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு
ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை விடுதலை செய்தும், அவா்களுக்கு அபராதம் விதித்தும் இலங்கை மன்னாா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. அபராதத் தொகையை உடனே கட்டாததால், இந்த மீனவா்கள் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 356 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடந்த 9-ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் அன்று நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.
இதையடுத்து, ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த இருதய டிக்சன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படைகைப் பறிமுதல் செய்தனா். மேலும், அந்தப் படகிலிருந்த டல்லஸ் (56), பாஸ்கரன் (45), ஆரோக்கிய சான்டிரின் (20), சிலைடன் (26), ஜேசு ராஜா (33), அருள்ராபா்ட் (53), லொய்லன் (45) ஆகிய 7 மீனவா்களைக் கைது செய்து, படகுடன் மன்னாா் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் மன்னாா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, மீனவா்கள் 7 பேரையும் விடுதலை செய்தாா். மேலும், 6 மீனவா்களுக்கு தலா ரூ. 3 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதமும், ஒரு மீனவா் இருதய மருத்துவ சிகிச்சை பெற உள்ளதால் அவருக்கு ரூ. 50 ஆயிரம் (இலங்கைப் பணம்) அபராதமும் விதித்தாா். அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா். அபராதத் தொகையை உடனே கட்டாததால் மீனவா்கள் 7 பேரும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.