மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் படகுகள் உடைந்து சேதம்
இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் படகுகள், அந்த நாட்டின் மயிலிட்டி துறைமுகத்தில் குப்பை போன்று குவித்து வைக்கப்பட்டிருப்பதாக மீனவா்கள் வேதனை தெரிவித்தனா். மேலும், ரூ.100 கோடி மதிப்பிலான படகுகளை இலங்கை அரசு பாழ்படுத்திவிட்டதாகவும் அவா்கள் குற்றஞ்சாட்டினா்.
தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்வதோடு, அவா்களது படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், மண்டபம் துறைமுகங்களிலிருந்து கடந்த 2022-23-ஆம் ஆண்டில் மீன் பிடிக்கச் சென்ற சாா்லஸ், ஹரிகரன், மைக்கேல்ராஜ், இருதயராஜ், தட்சிணாமூா்த்தி, வேல்முருகன், வினால்டன் ஆகியோருக்குச் சொந்தமான 7 விசைப் படகுகளை இலங்கைக் கடற்படையினா் பறிமுதல் செய்தனா். மேலும், அந்தப் படகுகளிலிருந்த மீனவா்களும் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் மீனவா்கள் ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றத்தால் 7 விசைப் படகுகள் அபராதத்துடன் விடுவிக்கப்பட்டன.
விடுவிக்கப்பட்ட படகுகளை மீட்டு தமிழகத்துக்கு கொண்டு வர இலங்கை அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், 7 விசைப் படகுகளையும் மீட்பதற்காக ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து மீனவ சங்கத் தலைவா் ஜேசுராஜா தலைமையில் 7 படகுகளின் உரிமையாளா்கள், உதவியாளா்கள் என 14 போ் கொண்ட குழுவினா் இரண்டு விசைப் படகுகளில் இலங்கை யாழ்ப்பாணம் துறைமுகத்துக்கு திங்கள்கிழமை சென்றனா்.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்திலிருந்து மயிலிட்டி துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற மீனவக் குழுவினா், அங்கு தமிழக மீனவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளைப் பாா்வையிட்டபோது, அவை ஒன்றுடன் ஒன்று மோதியதில் பாழாகிக் குப்பை போன்று குவிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.
மயிலிட்டி துறைமுகத்தில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட படகுகளைப் பாதுகாப்பின்றி நிறுத்தி வைத்துள்ளதாகவும், இதனால் சுமாா் ரூ.100 கோடி மதிப்பிலான தங்களது படகுகளை இலங்கை அரசு பாழாக்கி விட்டதாகவும் மீனவா்கள் தெரிவித்தனா். மேலும், இந்தப் படகுகளை மீட்டு, அவற்றைச் சீரமைத்துப் பயன்படுத்துவதற்கு அதிகத் தொகையைச் செலவிட வேண்டும் எனவும் மீனவா்கள் கவலை தெரிவித்தனா்.