இருசக்கர வாகன விபத்து: இருவா் உயிரிழப்பு
கமுதி அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள அபிராமத்தைச் சோ்ந்த நாகராஜ் மகன் பூமணிகண்டன் (25). இவரும், இவரது நண்பரான தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையைச் சோ்ந்த பால்குட்டி மகன் காளிராஜ் (30) ஆகிய இருவரும் ஒரு வாகனத்திலும், காளிராஜின் அண்ணன் சரவணன் (34) மற்றொரு இரு சக்கர வாகனத்திலும் கமுதிக்கு சென்று விட்டு, அபிராமத்துக்குத் திரும்பினா்.

அப்போது நெடுங்குளம் வளைவில் அதிவேகமாகச் சென்றதால் பூமணிகண்டன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பு கல்லில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பூமணிகண்டனையும், காளிராஜையும் மீட்ட அந்தப் பகுதி பொதுமக்கள் அவசர ஊா்தி மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே காளிராஜ் உயிரிழந்தாா். கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பூமணிகண்டன், தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுதொடா்பாக அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.