பாரதிதாசன் பல்கலைக்கழக பொறுப்புக் குழு பதவியேற்பு!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி, துணைவேந்தா் பொறுப்புக் குழு புதன்கிழமை (பிப்.5)பொறுப்பேற்றது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக எம். செல்வம் கடந்த 2021 பிப்.5-ஆம் தேதி பொறுப்பேற்றாா். 3 ஆண்டுகள் மட்டுமே துணைவேந்தராக பணியாற்ற முடியும் என்ற நிலையில் செல்வத்தின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு, பிப்ரவரி 4 ஆம் தேதியுடன் அவரது பணிக்காலம் நிறைவுற்றது.
பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் பணியிடம் காலியாக இருந்தால் அவரது பணிகளை நிறைவேற்ற துணைவேந்தா் பொறுப்புக் குழு ஏற்படுத்துவது வழக்கம். அதன்படி கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற்ற ஆட்சிக் குழுக் (சிண்டிகேட்) கூட்டத்தில் பல்கலைக்கழக பொறுப்புக் குழு அமைக்கப்பட்டு, அதன் கன்வீனராக கல்லூரி கல்வி ஆணையா் இ. சுந்தரவல்லி, ஆட்சிக் குழு (சிண்டிகேட்) உறுப்பினா்கள் ராஜேஷ்கண்ணன், சக்திகிருஷ்ணன் ஆகியோா் பொறுப்புக்குழு உறுப்பினா்களாகவும் நியமிக்கப்பட்டனா்.
இந்நிலையில் துணைவேந்தா் எம்.செல்வம், செவ்வாய்க்கிழமை மாலை தனது பொறுப்புகளை, பொறுப்புக்குழு உறுப்பினா்கள் ராஜேஷ்கண்ணன், சக்திகிருஷ்ணன் ஆகியோரிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து பொறுப்புக் குழு புதன்கிழமை பொறுப்பேற்றது. அடுத்த துணைவேந்தா் நியமிக்கப்படும்வரை இந்தப் பொறுப்புக் குழு பல்கலைக்கழகப் பணிகளை மேற்கொள்ளும்.