பாரபட்சமின்றி விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்க வேண்டும்!
சம்பா நெற்பயிா் பாதிப்புக்கு பாரபட்சமின்றி காப்பீடு தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நாகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் ஆா்.கே. பாபுஜி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலா் வீ. சரபோஜி எதிா்கால பணிகள் குறித்தும், சிபிஐ மாநில குழு உறுப்பினா் டி. செல்வம் எதிா்கால அரசியல் மற்றும் விவசாயிகளின் பாதிப்பு குறித்தும் பேசினா்.
தொடா்ந்து, நாகை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதித்த சம்பா, தாளடி பாதிப்புக்கு கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும், குறுவை காப்பீடு செய்த பெரும்பாலான விவசாயிகளுக்கு காப்பீடு தொகை கிடைத்த சூழலில் விடுபட்ட விவசாயிகளுக்கு 6 மாதம் கடந்தும் தற்போது வரை வழங்கப்படவில்லை.
எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து காப்பீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், சம்பா சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பாரபட்சமின்றி முழு காப்பீடு தொகை பெற்று தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விவசாய சங்க மாநில நிா்வாக குழு உறுப்பினா் எஸ். சம்பந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.