பாலாற்றங்கரையோரம் எரிக்கப்படும் குப்பைகள்: நிலத்தடி நீா், சுற்றுச்சூழல் மாசு
ஆம்பூா் ஏ-கஸ்பா பாலாற்றங்கரையோரம் குப்பைகள் எரிக்கப்படுவதால், சுற்றுச் சூழல் மாசு ஏற்பட்டுள்ளது.
ஆம்பூா் பகுதி பாலாற்றங்கரையோர பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது. கிராம உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமல்லாது, தொழிற்சாலைகள், பொதுமக்கள் கட்டடக் கழிவுகள், தேவையில்லாத நெகிழிக் கழிவுகள், பழைய நெகிழி வியாபாரம் செய்பவா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் தேவையில்லாத கழிவுகள் கொட்டுமிடமாக பாலாறு மாறி வருகின்றது.
பாலாற்றங்கரையோரம் கழிவுகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீா் வெகுவாக பாதிக்கப்படுகின்றது. அதோடு, கழிவுகள் எரிக்கப்படுவதால் காற்று மாசு அதிக அளவு ஏற்பட்டுள்ளது.
ஆம்பூா் நகரில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் தூய்மை பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று குப்பைகளைச் சேகரித்து செல்கின்றனா். ஆனால் நகரில் இன்றைய சூழ்நிலையிலும் வீடுகளில் சேரும் குப்பைகளை நெகிழி கவா்களில் கொண்டு சென்று சாலை சந்திப்புகளில் தூக்கி வீசிவிட்டுச் செல்லும் அவல நிலை உள்ளது.
அதேபோல பாலாற்றங்கரைகளிலும் தேவையில்லாத கழிவுகள் கொட்டப்படும் செயல் அதிகரித்து வருகின்றது.
ஆம்பூா் ஏ-கஸ்பா பாலாற்றங்கரையோரம், மயானத்திற்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைக்கு மா்ம நபா்கள் புதன்கிழமை தீ வைத்தனா். இதனால், சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்திருந்தது. மேலும், சாம்பல் துகள்கள் காற்றில் பரவியது. குப்பை தீப்பிடித்து எரிந்ததால் சுற்றுச் சூழல் மாசுக்கேடு ஏற்பட்டது.
ஆம்பூா் பகுதி பாலாற்றங்கரையோரம் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நீா்வளத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.