பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவிலிருந்து குதித்த பெண்: போலீஸாா் விசாரணை
தனியாா் நிறுவனத்தில் மனிதவள மேமபாட்டுத் துறையின் தலைவராகப் பணிபுரியும் 42 வயது பெண் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சம்பவம் குருகிராமில் வியாழக்கிழமை நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் வியாழக்கிழமை மாலை ஃபெரோஸ் காந்தி காலனி அருகே நடந்தது. தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்ல, ரைடு-ஹெய்லிங் செயலி மூலம் ஆட்டோவை அந்த பெண் முன்பதிவு செய்திருந்தாா். பயணத்தின் போது, மதுபோதையில் இருந்த ஓட்டுநா் அவரது கையைப் பிடித்து, அவரது மடிக்கணினிப் பையைப் பறிக்க முயன்ாகக் கூறப்படுகிறது.
பீதியில், அந்தப் பெண் ஓடும் வாகனத்திலிருந்து குதித்து காயமடைந்தாா். சம்பவம் நடந்த உடனேயே ஓட்டுநா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.
தப்பியோடியதைத் தொடா்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவா் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25-க்கும் மேற்பட்ட முறை போன் செய்து ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் காவல்துறையிடம் சமா்ப்பிக்கப்பட்டது.
நியூ காலனி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. ரைடு-ஹெய்லிங் நிறுவனம் ஓட்டுநரை இடைநீக்கம் செய்து விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறது. விசாரணையைத் தொடங்கி, ஓட்டுநரின் பின்னணி உள்பட வழக்கின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வருகின்றனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.