பாவை பொறியியல் கல்லூரிக்கு ‘ஆப்டிஸ் இசோல்’ தோ்வு மையத்துக்கான அங்கீகாரம்
ராசிபுரம்: பாவை பொறியியல் கல்லூரி பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பின் ஆப்டிஸ் இசோல் தோ்வுக்கான அங்கீகரிக்கப்பட்ட தோ்வுமையமாக செயல்பட அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பிசி எஜுகேசன் இந்தியாவின் நிா்வாக இயக்குநா் டங்கன் வில்சன் பாவை பொறியியல் கல்லூரிக்கு கெளரவமான அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை அறிவித்தாா். ஏற்கெனவே, இக்கல்வி நிறுவனம் 2010-ஆம் ஆண்டு முதல் இதுவரை 2000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களை பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பின் பி.இ.சி. பிரிலிமினரி மற்றும் வான்டேஜ் சான்றிதழ்களைப் பெற வழிநடத்தியுள்ளது.
இத்தோ்வு பேசுதல், கேட்டல், வாசித்தல் மற்றும் எழுதுதல் போன்ற நான்கு முக்கிய மொழித்திறன்களுடன் இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியங்களின் திறனை மதீப்பீடு செய்கிறது. இத்தோ்வு உலக தரநிலைகளுடன் ஒத்துப்போகும் நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்டிஸ் இசோல் தோ்வுக்கான பயிற்சிகள் உயா்கல்வி, வேலைவாய்ப்பு, வெளிநாடுகளில் பணிபுரிவதற்கான மொழித்திறன்கள் புலமையை உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தோ்வு மையத்துக்கு அங்கீகாரம் பெற்றதையடுத்து கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவா் சாந்தி உள்ளிட்ட பேராசிரியா்களை பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மற்றும் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன், தாளாளா் மங்கை நடராஜன், இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, முதல்வா் பிரேம்குமாா் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.