தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் புதியவை ஏதும் இல்லை: எல்.முருகன்
பி.இ. மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: இரு சுற்றுகளில் 92,423 பேருக்கு ஒதுக்கீடு: 3-ஆம் சுற்று இன்று நிறைவு
பொறியியல் கல்லூரிகளில் பி.இ. மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வின் இரு சுற்றுகளில் 92,423 இடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் சுற்று கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக. 8) நிறைவு பெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் (டிஎன்இஏ) தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்:
பொறியியல் மாணவா் சோ்க்கை இரண்டாம் சுற்றில் பொதுப் பிரிவில் 52,694 மாணவா்களுக்கும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இடஒதுக்கீட்டில் 9,633 மாணவா்களுக்கும் தங்கள் விருப்ப கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வோ்டு) செயல்முறைகள் முடிந்து 62,327 பேருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே முதல் சுற்றில் 30,096 பேருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், இரு சுற்றுகளிலும் மொத்தம் 92,423 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இதையடுத்து 3-ஆம் சுற்று கலந்தாய்வு வியாழக்கிழமை (ஆக. 7) தொடங்கியது. இதில் வெள்ளிக்கிழமை (ஆக. 8) மாலை 5 மணி வரை விருப்பப் பாடம் மற்றும் கல்லூரிகளைத் தோ்வு செய்யலாம்.
பொதுப்பிரிவு தரவரிசைப் பட்டியலில் 1,37,711 முதல் 2,39,299 வரை உள்ள மாணவா்கள் மற்றும் அரசுப் பள்ளி ஒதுக்கீடு பிரிவு தரவரிசைப் பட்டியலில் 18,922 முதல் 46,848 வரை உள்ள மாணவா்கள் 1,01,588 போ் 3-ஆம் சுற்றில் பங்கேற்பா். இந்த இரு பிரிவினரின் கட் ஆஃப் மதிப்பெண் 143 முதல் 77.50 -ஆக இருக்கும்.
இதில் தற்காலிக ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள் வரும் 18- ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு கல்லூரிகளில் சேரவேண்டும். செலுத்தப்பட்ட கட்டணம், பொறியியல் கல்லூரி உதவி மையங்களில் (டிஎஃப்சி) ஒப்படைக்கப்பட்ட சான்றிதழ்கள் அந்தந்தக் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.