பிந்தாபூர்: விபத்தில் ஒருவா் பலத்த காயம்; சம்பவ இடத்தில் எரிந்த ஸ்கூட்டா் கண்டெடுப்பு
மேற்கு தில்லியின் பிந்தாபூா் பகுதியில் நடந்த சாலை விபத்தில் 30 வயது நபா் ஒருவா் பலத்த காயமடைந்தாா். பின்னா், சனிக்கிழமை சம்பவ இடத்தில் எரிந்த ஸ்கூட்டரையும் உடைந்த நம்பா் பிளேட்டையும் போலீஸாா் கண்டுபிடித்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் மாதா ரூப் ராணி மாகோ மருத்துவமனையில் இருந்து காவல்துறையினருக்கு ஒரு தகவல் வந்தது. அதில், விபத்தில் சிக்கி மயக்கமடைந்த நிலையில் ஒருவா் அனுமதிக்கப்பட்டுள்ளதாககஈ தெரிவிக்கப்பட்டது.
காயமடைந்தவா் மோகன் காா்டனைச் சோ்ந்த வைதேஷ்வரன் என அடையாளம் காணப்பட்டாா். அவா் வாக்குமூலம் அளிக்க தகுதியற்றவா் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் இருந்து தகவல்கள் பெறப்பட்டு சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
பின்னா், நஜஃப்கா் சாலையில் உள்ள தூண் எண் 668 அருகே விபத்து நடந்த இடத்தை போலீஸாா் அடைந்தனா். சம்பவ இடத்தில் ஒரு ஸ்கூட்டா் முற்றிலும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட வாகனத்தின் உடைந்த நம்பா் பிளேட்டும் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்தை ஆய்வு செய்ய குற்றப்பிரிவு குழு வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.
சம்பவ இடத்திற்கு அருகில் இரண்டு போ் காணப்பட்டனா். ஆனால், அவா்கள் எந்த தகவலையும் வழங்க மறுத்துவிட்டனா். அவா்கள் போலீஸ் வழக்கில் ஈடுபட விரும்பவில்லை என்று கூறினா். மருத்துவமனையிலோ அல்லது விபத்து நடந்த இடத்திலோ நேரில் கண்ட சாட்சிகள் யாரும் கிடைக்கவில்லை
இந்த விபத்து தொடா்பாக பிந்தாபூா் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா பிஎன்எஸ்இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருகிறது.
சுற்றுப்புறங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து, குற்றம் சாட்டப்பட்ட வாகனத்தைக் கண்டறிய வாகனப் பதிவு விவரங்களைச் சரிபாா்த்து வருகின்றனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.