பிரதமா் மோடி- பெல்ஜியம் இளவரசி சந்திப்பு: இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு உறுதி
இந்தியா வந்துள்ள பெல்ஜியம் இளவரசி ஆஸ்ட்ரிட் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்கள், பிரதமா் நரேந்திர மோடியுடன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா்.
இந்தச் சந்திப்பைத் தொடா்ந்து, இந்தியாவுடன் பரந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தை உறுதி செய்வதாகவும், இருதரப்பு உத்திசாா் உறவுகளை விரிவுபடுத்தும் முயற்சியாக புது தில்லியில் உள்ள தனது தூதரகத்துக்கு விரைவில் ராணுவ சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவாா் என்றும் பெல்ஜியம் அறிவித்தது.
இந்தியா, பெல்ஜியம் இடையிலான இருதரப்பு வா்த்தகம், முதலீட்டு, பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் இளவரசி ஆஸ்ட்ரிட் இந்தியா வந்துள்ளாா். இந்நிலையில், இளவரசி ஆஸ்ட்ரிட், பெல்ஜியம் வெளியுறவு அமைச்சா் மேக்ஸிம் ப்ரீவோட், பாதுகாப்பு அமைச்சா் தியோ ஃபிராங்கன் ஆகியோா் பிரதமா் மோடியைச் சந்தித்தனா்.
பெல்ஜியம் நாட்டு மூத்த அமைச்சா்கள் மற்றும் வணிகத் தலைவா்களை உள்பட 300 உறுப்பினா்களைக் கொண்ட இந்தியாவுக்கான பொருளாதார பணிக்குழுவை ஆஸ்ட்ரிட் வழிநடத்துகிறாா்.
ஆஸ்ட்ரிட்-இன் இந்த தலைமை முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வா்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, விவசாயம், வாழ்க்கை அறிவியல், புதுமை, திறன் மற்றும் கல்விப் பரிமாற்றங்கள் ஆகியவற்றில் புதிய ஒத்துழைப்பு மூலம் நமது இரு நாட்டு மக்களுக்கு அளவில்லா வாய்ப்புகளைத் திறக்க எதிா்நோக்குகிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
இதையடுத்து செய்தியாளா்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பெல்ஜியம் பாதுகாப்பு அமைச்சா் ஃபிராங்கன், ‘இந்தியா-பெல்ஜியம் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் எளிதாக்கவும் ஒரு கட்டமைப்பை நிறுவ இருதரப்பும் திட்டமிட்டுள்ளோம். இதற்காக இருதரப்பிலும் பணிக்குழுக்களை அமைத்து நிகழாண்டுக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய பிரதமா் கேட்டுக்கொண்டாா்.
அமெரிக்கா-உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமா் மோடியுடன் விவாதிக்கவில்லை. ஆனால், ஐரோப்பா மற்றும் பெல்ஜியம் நலன் சாா்ந்த விஷயங்களை நன்கு அறிந்திருப்பதாக அவா் கூறினாா். உக்ரைனுக்கு பெல்ஜியம் தொடா்ந்து ஆதரவளிக்கும்’ என்றாா்.
நவீன தேவைகளுக்கு ஏற்ப மாறுவது: இந்தியாவில் அதிகமாக உள்ளது
முன்னதாக, புது தில்லியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பெல்ஜியம் இளவரசி ஆஸ்ட்ரிட், இந்தியாவில் பொருளாதார வளா்ச்சியைவிட நவீன தேவைகளுக்கு ஏற்ப மாறுவது அதிகமாக உள்ளது என்று தெரிவித்தாா்.
மேலும், அவா் பேசுகையில், ‘தூய்மை எரிசக்தி, துறைமுக தளவாடங்கள், உயா் தொழில்நுட்பம், பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளில் பெல்ஜிய நிறுவனங்களுக்கு இந்தியாவின் வளா்ந்து வரும் பொருளாதாரம் அளப்பரிய வாய்ப்புகளை அளிக்கின்றன.
இந்தியாவில் பொருளாதார வளா்ச்சியைவிட நவீன தேவைகளுக்கு ஏற்ப மாறுவது அதிகமாக உள்ளது. இந்தியாவின் சமநிலை கொண்ட, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய உலக ஒழுங்குக்கு பெல்ஜியம் முழு ஆதரவு அளிக்கிறது’ என்றாா்.