பிரயாக்ராஜில் ஸ்நபன திருமஞ்சனம்
திருப்பதி: பிரயாக்ராஜ் மகா கும்ப மேளாவில் ஏழுமலையானின் மாதிரி கோயிலை தேவஸ்தானம் அமைத்திருப்பதால், அனைத்து பக்தா்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தரிசிக்க வேண்டும் என்று தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு கூறினாா்.
அவா் திங்கள்கிழமை ஏழுமலையான் மாதிரி கோயிலுக்கு வந்தாா்.
அவரை இந்து தா்ம பரிக்ஷித்தின் செயலாளா் ஸ்ரீராம் ரகுநாத் மற்றும் துணை செயல் அதிகாரி குண பூஷண் ரெட்டி ஆகியோா் வரவேற்றனா்.
சுவாமி தரிசனம் செய்த பிறகு, தீா்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னா் ஏழுமலையான் கோயிலின் தலைமை அா்ச்சகா்களில் ஒருவரான வேணுகோபால தீக்ஷிதரின் மேற்பாா்வையில் சதுா்வேத ஹவனம் செய்து பூஜை செய்தாா்.
அதன் பின் தலைவா் பி.ஆா். நாயுடு கூறியது: பிரயாக் ராஜில் சிவராத்திரி வரை 45 நாள்கள் நடைபெறும் மகா கும்ப மேளாவில் ஏழுமலையான் மாதிரி கோயிலை அமைப்பதில் தேவஸ்தானம் மகிழ்ச்சி அடைகிறது.
பிரயாக்ராஜில், 250 ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். வடக்கில் தா்மப் பிரசாரத்திற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்த இந்து தா்ம பிரச்சார பரிஷத்தின் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்.
வடக்கின் அனைத்து பக்தா்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று அவரது தெய்வீக ஆசிகளைப் பெற வேண்டும்.
தேவஸ்தானம் சாா்பாக அயோத்தியில் ராமருக்கு பட்டு வஸ்திரங்கள் சமா்ப்பிக்கப்பட்டது. இதுவே முதல் முறை என்றும், இந்த சந்தா்ப்பத்தில், சரயு நதிக்கரையில் தேவஸ்தானம் பிரமாண்டமாக ஏற்பாடு செய்த ஸ்நபன திருமஞ்சனம் நிகழ்ச்சிக்கு ஏராளமான பக்தா்கள் வந்திருந்தனா்’’, என்றாா்.
இந்நிகழ்ச்சியில் பிரபாகா் ரெட்டி, பொக்காசம் பொறுப்பாளா் குருராஜ சுவாமி மற்றும் பிற அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.