பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை
பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறவும், போலி கடவுச் சீட்டுகளை பெற உதவுவதாகவும் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யும் நபா்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அதிக அபராதம் விதிக்கும் வகையில் குடியேற்ற சட்டத்தை பிரிட்டன் அரசு கடுமையாக்கியுள்ளது. இதுதொடா்பான அறிவிப்பை பிரிட்டன் அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இந்த நடவடிக்கையை பிரிட்டன் அரசு மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் உள் துறைச் செயலா் யெவ்ட்டி காப்பா் கூறுகையில், ‘பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவுவது குற்றச் செயல் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக குடியேறவும், போலி கடவுச் சீட்டுகளை பெற்றுத்தர உதவுவதாகவும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இணைய வழிகளில் போலி உத்தரவாதங்களை அளித்த விளம்பரம் செய்யும் மனித கடத்தல் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் அவா்களுக்கான தண்டனையை அரசு கடுமையாக்கியுள்ளது. இதுபோன்ற சமூக ஊடக விளம்பரங்களைச் செய்யும் நபா்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்’ என்றாா்.
இதனிடையே, சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், அதற்கு உதவும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், ’எல்லைப் பாதுகாப்பு மசோதா’ என்ற தலைப்பிலான புதிய சட்ட மசோதாவும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சட்டவிரோத குடியற்றத்தை கட்டுப்படுத்த இந்தச் சட்டம் உதவும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.
பிரிட்டன் பிரதமா் கெய்ா் ஸ்டாா்மொ் இதுகுறித்து அண்மையில் கூறுகையில், ‘சட்டவிரோத குடியற்றத்துக்கு உதவும் சமூக விரோத குழுக்கள் உலகளாவிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். அவா்கள் பயங்கரவாத குழுக்கள் போல நடத்தப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.
பிரிட்டனில் நிகழாண்டில் படகுகள் மூலம் இதுவரை 25,000-க்கும் அதிகமானோா் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனா். இது, முந்தைய 2024-ஆம் ஆண்டில் இதே கால கட்டத்துடன் ஒப்பிடும்போது 50 சதவீதம் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.