பிரேசில்: கனமழை மற்றும் நிலச்சரிவினால் 10 பேர் பலி!
பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவினால் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலில் கடந்த ஒரு வருடமாக ஏற்பட்டு வரும் அதிபயங்கர வானிலை மாற்றங்களினால் அவ்வப்போது அங்கு பேரிடர்கள் நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜன.11 அன்று அந்நாட்டின் இபாடிங்கா நகரத்தில் சுமார் 80 மி.மீ (3 இன்ச்) அளவிலான மழைப் பொழிவுப் பதிவானது. இதனைத் தொடர்ந்து, பெத்தானியா நகரத்தைச் சுற்றியுள்ள குன்றுகளில் இருந்து ஏற்ப்பட்ட நிலச்சரிவினால் அப்பகுதியிலுள்ள குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்தன.
இதையும் படிக்க: லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீ: தீயணைப்பு வீரர் வேடமிட்டு திருடிய 29 பேர் கைது!
இந்த நிலச்சரிவில் சிக்கிப் பலியான ஒரு சிறுவன் உள்பட 10 பேரது உடல்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானவரது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டின் ஏபிரல் மற்றும் மே மாதங்களில் அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் சுமார் 180பேர் பலியானார்கள்.
மேலும், 17 ஆண்டுகளில் இல்லாத அளவிலான காட்டுத்தீ அந்நாட்டிலுள்ள அமேசான் காடுகளில் ஏற்பட்டதினால் அந்நாடு கடும் வறட்சியையும் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.