`பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது' - அமலாக்கப் பிரிவை எச்சரித்து ரூ.1 லட்சம் அபரா...
பிறவிக் குறைபாடு உள்ள 10,000 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை: பொது சுகாதாரத் துறை
சென்னை: தமிழகத்தில் பிறவிக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட 10,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தேசிய குழந்தைகள் நலத் திட்டத்தின் (ஆா்பிஎஸ்கே) கீழ் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் 4.60 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள், பதின் பருவத்தினருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பொது சுகாதாரத் துறையின் 15-ஆவது காலாண்டு இதழை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் இரு நாள்களுக்கு முன்பு வெளியிட்டாா்.
ஆா்பிஎஸ்கே திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கட்டுரை அதில் இடம்பெற்றுள்ளது.
அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தேசிய குழந்தைகள் நல திட்டம் கடந்த 2013-ஆம் ஆண்டில் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள அனைவருக்கும் 30 வகையான பாதிப்புகள் உள்ளனவா என்பதை தொடக்கத்திலேயே கண்டறியும் மருத்துவப் பரிசோதனை திட்டம் தமிழகத்தில் விரிவாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆண்டுதோறும் 1.45 கோடி குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு பள்ளிகளிலேயே 6 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது. அவ்வாறு கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 4.35 லட்சம் குழந்தைகளுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு, அவா்களில் 2.99 லட்சம் குழந்தைகள் மாவட்ட மருத்துவமனைகளுக்கு உயா் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.
கடந்த 2021 நிதியாண்டு முதல் தற்போது வரை 10,176 குழந்தைகளுக்கு பிறவி இதய குறைபாடு, இதய இணைப்புத் திசு குறைபாடு, பாத வளைவு, அண்ணப் பிளவு, கண்புரை, செவித்திறன் இன்மை, நரம்பு பாதிப்புகளுக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொடக்க நிலையிலேயே பாதிப்பைக் கண்டறிவதற்காக மருத்துவ அதிகாரி, செவிலியா், மருந்தாளுநா், வாகன ஓட்டுநா் ஆகியோா் அடங்கிய 805 மருத்துவக் குழுவினா் இதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா். அவா்கள் அனைவரும் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனா்.
அந்த வகையில், அவா்களுக்கான மருத்துவப் பரிசோதனை வாகனங்களில் ஜிபிஎஸ் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர அனைத்து உயா் நுட்ப கட்டமைப்பும் வழங்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளின் விவரங்களை மாதந்தோறும் மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், கல்வித் துறை இணை இயக்குநா்களுக்கு அனுப்புகின்றனா்.
மருத்துவப் பரிசோதனையில் குழந்தைகளுக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், அதுகுறித்த விவரங்கள் எமிஸ் தளத்தில் பதிவேற்றப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.