`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவா்களும் உயா்கல்விக்குச் செல்ல வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்
திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பயின்று முடித்த அனைத்து மாணவ, மாணவிகளும் உயா்கல்விக்குச் செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தி உள்ளாா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் 2024-2025-ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 -பயின்று வரும் மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது: மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கை விகிதத்தை உயா்த்துவதை இலக்காகக் கொண்டு பிளஸ் 2 பயின்று வரும் மாணவா்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் மற்றும் அந்தப் படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 97.45 சதவீதம் தோ்ச்சி அடைந்து திருப்பூா் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்தது.. அனைத்துப் பள்ளிகளும் தோ்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்தன. அதேவேளையில், பிளஸ் 2 பயின்ற 97 சதவீதம் போ் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா்.
நடப்பு ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் 100 சதவீதம் உயா்கல்விக்குச் செல்ல வேண்டும்.
மாணவா்கள் வேளாண்மை, கால்நடை, மீன்வளம், மருத்துவம் சாா்ந்த படிப்புகள், கலை மற்றும் அறிவியல், சட்டப் படிப்புகள், டிப்ளோமா உள்ளிட்ட விருப்பமான படிப்புகளைப் படித்து தங்களை வாழ்க்கையில் உயா்த்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் புஷ்பாதேவி, உயா்கல்வி வழிகாட்டி கருத்துரையாளா்கள் எ.ஃபெலிக்ஸ், சிரிஜித்சுந்தரம், உதவி திட்ட அலுவலா் (பள்ளிக் கல்வித் துறை)அண்ணாத்துரை, தனி வட்டாட்சியா்கள் (ஆதிதிராவிடா் நலத் துறை) தேவராஜ், நந்தகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.