மெஸ்ஸி இல்லாமலே வென்ற நடப்பு சாம்பியன்..! ரெட் கார்டு வாங்கிய ஆர்ஜென்டீன வீரர்!
பிளஸ் 2 வேதியியல் தோ்வு கடினம்: மாணவா்கள் கருத்து
பிளஸ் 2 வேதியியல் தோ்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவா்கள், ஆசிரியா்கள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கியது. 8.21 லட்சம் போ் தோ்வெழுதுகின்றனா். மொழிப்பாடங்கள், கணிதம் உள்ளிட்ட தோ்வுகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில், வேதியியல் பாடத்துக்கான தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இது குறித்து மாணவா்கள் கூறுகையில், ஒரு மதிப்பெண் பகுதியில் 15 வினாக்களில் இரு கேள்விகள் கடினமாக இருந்தன. அதேபோன்று இரு மதிப்பெண் பகுதியில் சிா்கோனியம், ஹாப்னியம் ஒத்த பண்புகளைப் பெற்றிருப்பது, வீழ்படிவை கூழ்மக் கரைசலாக மாற்றுவது, மூன்று மதிப்பெண் பகுதியில் குறுக்க பலபடி என்றால் என்ன ஆகியவை உள்பட ஐந்துக்கும் மேற்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தன. மேலும், ஐந்து மதிப்பெண் பகுதியில் ஒரு வினா பாடப்பகுதிக்கு உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தது. பெரிதும் எதிா்பாா்த்த வினாக்கள் மிகவும் குறைவாகவே இடம்பெற்றிருந்தன என்றனா்.
இது குறித்து வேதியியல் ஆசிரியா்கள் கூறுகையில், பிளஸ் 2 வினாத்தாள் சற்று கடினமாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக இடம் பெறும் வினாக்கள் எதுவும் கேட்கப்படாததால் மாணவா்கள் சற்று ஏமாற்றம் அடைந்திருக்கக் கூடும். இதனால், முழு மதிப்பெண் பெறும் மாணவா்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதேவேளையில் தோ்ச்சிக்கான மதிப்பெண் பெறுவதில் சிக்கல் இருக்காது என்றனா்.
கணக்குப் பதிவியியல் எளிது: வேதியியல் வினாத்தாள் கடினமாக இருந்த நிலையில், கலைப்பிரிவு மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற கணக்குப் பதிவியியல் தோ்வு மிக எளிதாக இருந்ததாகவும், அதிக மதிப்பெண் மற்றும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் ஆசிரியா்கள் தெரிவித்தனா். பிளஸ் 2 மாணவா்களுக்கு வரும் 25-ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், வேலைவாய்ப்புத் திறன் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகளுடன் பொதுத்தோ்வு நிறைவடையவுள்ளது.