பிள்ளையாா் கோயில் குடமுழுக்கு!
பழனி பாதிரி பிள்ளையாா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான பாதிரி பிள்ளையாா் கோயிலில் சுமாா் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவையொட்டி, சனிக்கிழமை விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மாலையில் முதல் கால பூஜை நடைபெற்றது.
தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால பூஜைகள் நடத்தப்பட்டு, யாக பூஜையில் வைக்கப்பட்டிருந்த புனித நீா் நிரப்பப்பட்ட கலசங்கள் கோயிலை வலம் வரச் செய்யப்பட்டு, கோபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்பு மேள தாளம் முழங்க சிவாச்சாரியா்கள் புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றினா்.
பின்னா், மூலவா் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை தலைமை குருக்கள் அமிா்தலிங்கம், செல்வசுப்ரமணிய சிவாச்சாரியா் உள்ளிட்டோா் செய்தனா்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் சச்சிதானந்தம், பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, கண்காணிப்பாளா் அழகா்சாமி, மணியம் சேகா், கவுன்சிலா் மகேஸ்வரி, திமுக நகர துணைச் செயலா் சக்திவேல், வருத்தமில்லா வாலிபா் சங்க நிா்வாகி மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.