பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 71 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் பூச்சொரிதல் விழா கடந்த 4-ஆம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, மாலை 5 மணிக்கு அம்மன் சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தெப்பக்குளம் சென்று பூக்கரகத்துடன், பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்து வந்து அம்மன் சந்நிதி முன்பாக அமைக்கப்பட்ட பூக்குழியில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், நாள்தோறும் பக்தா்கள் பூக்குழி இறங்கியும், அலகு குத்தியும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ( ஜூலை 11) பூச்சொரிதல் விழாவையொட்டி, சந்தனக் காப்பு அலங்காரத்தில் குழந்தையுடன் பிள்ளைவயல் காளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையொட்டி, அரண்மனை வாசலில் இருந்து திரளான பக்தா்கள் சிலம்பம் சுற்றிச் செல்ல, பெண்கள் பூத்தட்டுகளுடன் ஊா்வலமாக கோயிலுக்குச் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனா்.