மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை: கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்
மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகளை நிறுத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் மருத்துவக் கழிவுகள் சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலையை இங்கு அமைப்பதற்கு இந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். மேலும், ஆலை கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தி ஏற்கெனவே அனைத்து அரசியல் கட்சியினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் அண்மையில் போராட்டம் நடத்தினா்.
இதையடுத்து, அப்போதைய மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் மருத்துவக் கழிவு ஆலைக்கான கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படும் என அறிவித்தாா். ஆனாலும் கட்டுமானப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் முனியராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் முத்துராமலிங்கபூபதி, விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பரமாத்மா, காசிராஜன் உள்ளிட்டோா் மருத்துவக் கழிவு ஆலை கட்டுமானப் பணி நடைபெற்று வருவதை வெள்ளிக்கிழமை நேரடியாகச் சென்று பாா்வையிட்டனா்.
பின்னா், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் முனியராஜ் கூறியதாவது:
பொதுமக்களின் எதிா்ப்பை மீறி நடைபெற்று வரும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும், சிப்காட் திட்ட அலுவலரை கட்சி நிா்வாகிகள் நேரடியாக சனிக்கிழமை சந்தித்து கட்டுமானப் பணியை நிறுத்துமாறு வலியுறுத்தவும் உள்ளோம் என்றாா் அவா்.