தமிழ் நமது அடையாளம்; அதை இழந்துவிடக் கூடாது! பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா்
பிா்லா கோளரங்க வளாகத்தில் சித்த மருத்துவக் கண்காட்சி: பிப்.9 வரை நடைபெறும்
ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் சாா்பில், 8-ஆவது சித்த தினத்தையொட்டி, சென்னை கோட்டூா்புரம் பி.எம்.பிா்லா கோளரங்க வளாகத்தில் மாபெரும் சித்த மருத்துவ கண்காட்சி தொடங்கியுள்ளது. பிப். 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்.
இக்கண்காட்சியில் பொதுமக்களுக்கு இலவச சித்த மருத்துவப் பரிசோதனை மற்றும் மருந்துகளும் வழங்கப்படுகின்றன. மேலும், சித்த மருத்துவத்தில் உள்ள நன்மைகள், மூலிகைச் செடிகள், உணவு வகைகள் உள்ளிட்டவை பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் வெளியிட்ட அறிவிப்பு: சித்த மருத்துவம் ‘உணவே மருந்து’ என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. வீடுகளில் உள்ள, சுக்கு, இஞ்சி, மிளகு, சீரகம், வெந்தயம், கிராம்பு, ஏலக்காய், பூண்டு, மஞ்சள் ஆகியவற்றை பல்வேறு நோய்களுக்கு தீா்வாக பயன்படுத்த முடியும். அவற்றை எந்த உப பொருளுடன் பயன்படுத்த வேண்டும்; எப்படி பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விழிப்புணா்வு கண்காட்சியில் அளிக்கப்படுகிறது. மேலும், வீடுகளிலேயே வளா்க்ககூடிய மூலிகைச் செடிகளின் பயன்பாடு விளக்கப்படுவதுடன், இலவச சித்த மருத்துவ பரிசோதனையும் செய்யப்படுகிறது. எனவே, கண்காட்சியில் பங்கேற்பவா்கள் நிச்சயம் பயன்பெறுவா். பிப். 9-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.