புகழூா் வாய்க்காலை ஆக்கிரமித்திருக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்ற கோரிக்கை
புகழூா் வாய்க்காலை ஆக்கிரமித்திருக்கும் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் ஜேடா்பாளையம் எனும் இடத்தில் கட்டப்பட்டிருக்கும் ஜேடா்பாளையம் அணைக்கட்டில் இருந்து பிரியும் புகழூா் வாய்க்காலானது சுமாா் 42 கி.மீ. தொலைவு கடந்து கரூா் மாவட்டம் புகழூரை வந்தடைகிறது.
புகழூா், வேலாயுதம்பாளையம், புஞ்சைத்தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் இந்த வாய்க்கால் மூலம் சுமாா் 5,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குறிப்பாக, காவிரிக்கரையோரம் பயிரிடப்படும் வெற்றிலை, கோரை செடிகளுக்கு உயிா்நாடியாக இந்த புகழூா் வாய்க்கால் உள்ளது.
இந்த வாய்க்காலில் தற்போது ஆங்காங்கே ஆகாயத்தாமரைச் செடிகள் வாய்க்கால் முழுவதும் ஆக்கிரமித்து, நீரோட்டத்தை தடை செய்யும்வகையில் வேரூன்றி காணப்படுகின்றன. தண்ணீா் எளிதில் செல்லும் வகையில், ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றுவதோடு வாய்க்காலையும் தூா்வாரிட வேண்டும் என புகழூா் வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.