Janhvi Kapoor: அம்மாவின் சேலையில் ஜொலித்த ஜான்வி கபூர் - க்ளாசிக் க்ளிக்ஸ்!
கரூரில் செப். 30-இல் காவிரி ஆற்றில் இறங்கி மணல் லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம்: லாரி உரிமையாளா்கள் சங்கம் அறிவிப்பு
கரூரில் வரும் 30-ஆம் தேதி காவிரி ஆற்றில் இறங்கி மணல் லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.
இந்தப் போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, தமிழ்நாடு லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் சங்கத் தலைவா் செல்ல.ராஜாமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கடந்த இரு ஆண்டுகளாக அரசு மணல் குவாரிகள் செயல்படாததால் கடும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கரூா் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி சோமூா் ஊராட்சிக்குள்பட்ட அச்சமாபுரம், திருமுக்கூடலூா், காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காவிரி ஆற்றில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக அள்ளப்படும் மணலை அதிக விலைக்கு (ஒரு யூனிட் ரூ. 7,500) விற்பனை செய்கின்றனா்.
இவ்வாறு சட்ட விரோதமாக ஆற்றில் மணல் அள்ளப்படுவதால் நாள்தோறும் அரசுக்கு ரூ. 50 லட்சம் வரை இழப்பீடு ஏற்படுகிறது. இந்தச் சட்டவிரோத செயல் குறித்து மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், வருவாய்த்துறை அதிகாரிகள், கனிம வளத்துறையினா் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நேரிடையாக மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த மணல் கொள்ளையை தடுக்கக் கோரி செப். 30-ஆம் தேதி தமிழ்நாடு லாரி உரிமையாளா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் ஆகியோா் இணைந்து, மணல் லாரிகள், லாரியில் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகியவற்றை சிறைபிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளோம்.
இப் போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளோம். மணல் கொள்ளையை தடுக்க சோதனைச் சாவடி அமைக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா். செப். 30-ஆம் தேதிக்குள் தடுக்காவிட்டால் நாங்கள் கூறியபடி போராட்டத்தில் ஈடுபடுவோம்.
அரசுக்கு இழப்பீடு ஏற்படுவதை தடுக்கவும், தொடரும் மணல் கொள்ளையைத் தடுக்கவும் அரசு உடனே மணல் குவாரியை திறக்க வேண்டும் என்றனா். அப்போது, சங்கச் செயலாளா் ஆா். ரவிக்குமாா், பொருளாளா் எம். ராமசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.