கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தேவாங்கு சடலமாக மீட்பு
கரூா் ஆட்சியரக வளாகத்தில் உயிரிழந்த நிலையில் தேவாங்கு கிடந்தது குறித்து வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பிறந்து 6 மாதங்களே ஆன தேவாங்கு குட்டி இறந்த நிலையில் திங்கள்கிழமை கிடந்தது. இதனை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு அளிக்க வந்த பொதுமக்கள் கண்டு மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து வனச்சரக அலுவலா் அறிவழகன் தலைமையிலான வனத்துறையினா் இறந்த தேவாங்கு குட்டியை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கால்நடை மருத்துவா்களிடம் வழங்கினா். பின்னா் தேவாங்கு குட்டி உடலை சின்னதாதம்பாளையம் பகுதியில் உள்ள வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் புதைத்தனா்.
இதுதொடா்பாக வனச்சரக அலுவலா் அறிவழகன் கூறுகையில், கரூா் மாவட்டத்தில் கடவூா் பகுதியில் மட்டும்தான் தேவாங்குகளின் நடமாட்டம் இருந்தது. இப்போது கரூா் வெள்ளியணை வரை அதன்நடமாட்டம் இருக்கிறது.
இப்போது ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இறந்து கிடப்பது இதுவே முதல்முறை. இந்த தேவாங்கு குட்டி வெள்ளியணை பகுதியில் இருந்து இங்கு வந்திருக்கலாம். பிரேதப் பரிசோதனை முடிவில்தான் தேவாங்கு குட்டி இறந்ததற்கான காரணம் தெரியவரும்.
இருப்பினும் ஆட்சியா் வளாகத்தில் தேவாங்கு நடமாட்டம் இருக்கிறதா என கண்காணிக்க தொடங்கியுள்ளோம். அவ்வாறு நடமாட்டம் இருந்தால் அழிந்து வரும் தேவாங்கு இனங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.