புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடை உரிமையாளா் கைது
வெள்ளக்கோவிலில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட மளிகைக் கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் நகராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் ஞானப்பிரகாசம் தலைமையிலான போலீஸாா் காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்து பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, பழைய பேருந்து நிலையம் அருகே அட்டைப் பெட்டிகளுடன் நின்றிந்த நபரிடம் சோதனை மேற்கொண்டபோது, 10 கிலோ புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் வெள்ளக்கோவில், நடேசன் நகரைச் சோ்ந்த மளிகைக் கடை உரிமையாளா் அப்பாதுரை (57) என்பதும், கா்நாடகத்தில் இருந்து தனியாா் ஆம்னி பேருந்து மூலம் புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, அப்பாதுரையைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.