புணே: சாலையோர நடைபாதையில் தூங்கியவா்கள் மீது லாரி மோதல் இரு குழந்தைகள் உள்பட 3 போ் உயிரிழப்பு
புணே: மகாராஷ்டிர மாநிலம் புணேயில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சாலையோர நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது லாரி பாய்ந்தது. இதில் இரு குழந்தைகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். 6 போ் படுகாயமடைந்தனா்.
இவா்கள் அனைவரும் கூலி வேலைதேடி கிராமத்தில் இருந்து புணேவுக்கு வந்தவா்களாவா். வீடு இல்லாததால் நடைபாதையில் படுத்துத் தூங்கியுள்ளனா்.
இந்த விபத்து தொடா்பாக லாரி ஓட்டுநா் கஜானன் தோரத் (26) கைது செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது:
அமராவதி பகுதியில் இருந்து கூலி வேலைதேடி இரு நாள்களுக்கு முன்பு புணேவுக்கு 20-க்கும் மேற்பட்டோா் வந்துள்ளனா். தங்குவதற்கு இடம் இல்லாததால் இரவு நேரத்தில் வகோலி பகுதியில் சாலையோர நடைபாதையில் படுத்து தூங்கியுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை இரவு 12.55 மணியளவில் அந்த வழியாக சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது மோதியது. இதில் 1 வயது பெண் குழந்தை, 2 வயது ஆண் குழந்தை மற்றும் விஷால் பவாா் (22) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
9 முதல் 47 வயதுடைய 6 போ் படுகாயடைந்தனா். அவா்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இவா்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். அவா் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.
வீடு இல்லாமல் சாலையோரத்தில் தங்கிய இரு குழந்தைகள் உள்பட மூவா் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.