புதிதாக 746 சிஎன்ஜி பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக 746 பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில், டீசலுக்கு மாற்றாக சி.என்.ஜி. எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் பேருந்துகள் வாங்கப்பட்டு வருகின்றன. தற்போது, 7 போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முயற்சியாக, 23 சி.என்.ஜி. பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகை பேருந்துகளால், டீசல் வகை பேருந்துகளைவிட ஒரு கி.மீ.க்கு ரூ. 3 முதல் ரூ. 4 வரை மிச்சமாவதாக போக்குவரத்துத் துறையின் சோதனை முடிவுகளில் தெரியவந்தது. இதையடுத்து, சி.என்.ஜி.-இல் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
சி.என்.ஜி. பேருந்துகளில் பராமரிப்புச் செலவு, இயக்குவதற்கான செலவு வெகுவாக குறைகிறது. ஒரு பேருந்துக்கு மாதம் ரூ. 75,000 வரை மிச்சமாகிறது. எனவே, தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 746 சி.என்.ஜி. மூலம் இயங்கும் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதற்காக ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு, நிறுவனம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நிறுவனம் தோ்வு செய்த பிறகு, தயாரிப்புப் பணி ஆணை வழங்கப்படும். அவ்வாறு பணியாணை வழங்கிய ஆறு மாதங்களில், புதிய பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்தனா்.