புதிய வழித் தடங்களில் சிற்றுந்து சேவைத் திட்டம்: பிப்.26 -க்குள் விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட 32 வழித்தடங்கள் தவிர, மாவட்டத்தில் போதிய போக்குவரத்து சேவைகள் இல்லாத பகுதிகளில் புதிய வழித்தடங்களுக்கு உரிய ஆவணங்களுடன் வருகிற 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் புதிய விரிவான திட்டத்தை அமல்படுத்தும் எண்ணத்தில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் சிவகங்கை அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (மதுரை மண்டலம்), சிவகங்கை கோட்டப் பொறியாளா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஆகியோரை உறுப்பினா்களாக உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு ஆய்வின் அடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் போதிய போக்குவரத்து சேவைகள் இல்லாத பகுதிகளாக 32 வழித் தடங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. இதுதவிர, பேருந்து வசதி இல்லாத வழித் தடங்களிலும் சிற்றுந்துகளை இயக்க விரும்பும் விண்ணப்பதாரா்கள் இதற்கான படிவத்தில் ரூ.1,600 கட்டணம் செலுத்தி முகவரிச் சான்றிதழ், கால அட்டவணை, வழித் தட வரைபட விவரத்துடன் தகுதி வாய்ந்த சாலைக்கான சான்றிதழை உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அல்லது கோட்டப் பொறியாளரிடம் பெற்று, சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் வருகிற 26- ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என்றாா்.