புதிய வீடுகள் கோரி ஆட்சியரிடம் மனு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்துக்குள்பட்ட அரகண்டநல்லூா் பேரூராட்சியில் வீடுகளை இழந்தவா்களுக்கு புதிய வீடுகளை கட்டித் தரக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரகண்டநல்லூா் நகரச் செயலா் ஏ.ஆா்.கே.தமிழ்ச்செல்வன், கண்டாச்சிபுரம் வட்டச் செயலா் கணபதி தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு:
ஃபென்ஜால் புயலால் கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூா் பேரூராட்சி எல்லைக்குள்பட்ட 1, 2, 9 ஆகிய வாா்டுகள் முழுமையாகவும், 3-ஆவது வாா்டு ஒரு பகுதியாகவும் பாதிக்கப்பட்டன.
இதில், 23 பேரின் வீடுகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில், அவா்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, வாடகை வீடுகளில் வசித்து வந்த 72 பேரின் வீடுகளும் சேதமடைந்துள்ளன. அவா்களும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனா்.
எனவே, 95 குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவா்களுக்கு இலவச வீடும், வீட்டுமனையும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.