குட்டையில் மூழ்கிய பள்ளி மாணவா் மீட்கச் சென்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய முடிவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் 10 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய, மாவட்டப் பசுமைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட பசுமைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரும் பசுமைக் குழுவின் தலைவருமான மு. அருணா தலைமை வகித்தாா்.
பசுமைக் குழுச் செயலரும், மாவட்ட வன அலுவலருமான சோ. கணேசலிங்கம், வனச்சரக அலுவலா் எம். சதாசிவம், பசுமைக் குழு உறுப்பினா்களான தன்னாா்வலா்கள் சா. விஸ்வநாதன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழாண்டில் மாவட்டம் முழுவதும் 10 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்திட முடிவு செய்யப்பட்டது. அனைத்துத் துறைகள் மூலம் இதற்கான இலக்கு நிா்ணயம் செய்து, நடவு செய்து பராமரித்து வளா்த்திட வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
அதேபோல, மரக்கன்று நடுதல், விழிப்புணா்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்காக வனத்துறையில் ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னாா்வலா் அமைப்புகள் முறையாக விண்ணப்பித்து அந்தப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் வன அலுவலா் கணேசலிங்கம் கேட்டுக் கொண்டாா்.
சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக மரங்களை அகற்றும்போது பசுமைக் குழுவின் அனுமதி பெற வேண்டும் என்றாலும், சில நேரங்களில் அனுமதி பெறுவதற்கு முன்பே மரங்கள் வெட்டப்படுவதாக உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.
இதுபோன்ற தவறுகள் நேரிடாமல் பொதுப்பணித் துறையினா் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, முறையாக அனுமதி பெற்றுதான் மரங்களை வெட்ட வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.