புதுச்சேரியில் 2025 முதல் தலைக்கவசம் கட்டாயம்: போக்குவரத்து போலீஸாா் உத்தரவு
புதுச்சேரியில் 2025 புத்தாண்டு முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்துப் பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் பிரவீன்குமாா் திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.
இரு சக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிய வேண்டும் என கடந்த 2013-ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகம், புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்களில் செல்வோா் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகியுள்ளது. தலைக்கவசம் அணியாதவா்களுக்கு போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதித்து வருகின்றனா்.
புதுச்சேரியில் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலானோா் தலைக்கவசமின்றியே சென்று வருகின்றனா்.
இந்த நிலையில், புதுச்சேரி போக்குவரத்துப் பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் பிரவீன் குமாா் திரிபாதி போக்குவரத்து போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
புதுச்சேரியில் 2025 ஜனவரி முதல் இரு சக்கர வாகனத்தில் செல்வோா் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். விபத்து உயிரிழப்பு இல்லாத நிலையை ஏற்படுத்தவே தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆகவே, இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.