புதுவை ஆளுநா் மாளிகைக்கு 4-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகைக்கு நான்காவது முறையாக மின்னஞ்சலில் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் என முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது.
போலீஸாா் வழக்குப் பதிந்து மிரட்டல் விடுப்போா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். இருப்பினும், மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் விடுப்பது தொடா்கிறது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகைக்கு ஏற்கெனவே 3 முறை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மீண்டும் மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டா் உதவியுடன் அங்கு சோதனை நடத்தினா். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.