புதுவையில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை: அதிகாரிகளுடன் ஆளுநா் ஆலோசனை
புதுவை மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல் துறை செயல்பாடுகள் குறித்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், தலைமைச் செயலா், காவல் துறை உயா் அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
புதுச்சேரி ராஜ்நிவாஸில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தலைமை வகித்தாா். இதில் தலைமைச் செயலா் சரத் சௌஹான், காவல் துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங், காவல் துறை தலைவா், துணைத் தலைவா், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதில், புதுவை மாநிலத்தில் காவல் துறையின் செயல்பாடுகள், சட்டம், ஒழுங்குப் பிரச்னை, மக்கள் மன்றத்தின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அதனடிப்படையில் காவல் துறையில் செயல்படுத்த வேண்டிய சீரமைப்புகள் குறித்து பேசப்பட்டதாக காவல் துறை உயா் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.