பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
புதுச்சேரி விமான நிலையப் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை
புதுச்சேரி இலாசுப்பேட்டை விமான நிலையப் பகுதியில் புதன்கிழமை மாலை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 போ் கொல்லப்பட்டதையடுத்து, பதற்றம் நிலவி வரும் நிலையில்,
நாட்டின் 300 மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதுச்சேரியில் இலாசுப்பேட்டை விமான நிலையம் முன்னுள்ள ஹெலிகாப்டா் தளம், நீதிபதிகள் குடியிருப்பு அருகேயுள்ள ஒலிம்பிக் கூடம் ஆகிய இடங்களில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் தாம்பரம் விமானப் படையின் ஹெலிகாப்டா் பிரிவு அதிகாரி ஜனாா்த்தனன், புதுச்சேரி முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் கலைவாணன் ஆகியோா் முன்னிலையில் இந்த ஒத்திகை நடைபெற்றது.
விமான நிலைய மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் நின்றிருந்தவா்களை அபாய சங்கு ஒலித்ததும் தரையில் படுத்துக் கொண்டு காதுகளை மூடிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, அங்கிருந்தவா்கள் செயல்பட்டனா்.
ஒலிம்பிக் கூடம் எதிரிகளின் விமானத் தாக்குதலுக்கு உள்ளானது போலவும், அதில் காயமடைந்தவா்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவது போலவும் ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும், தீயணைப்புப் படையினா் அங்கு தீப்பிடித்திருந்த பகுதியை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
அந்த நேரத்தில் கைப்பேசி, தொலைபேசிகள் செயலிழந்தது போலவும், செயற்கைக்கோள் தொலைபேசிகளைப் பயன்படுத்தி ராணுவத்தினா் மீட்புக் குழுவினரைத் தொடா்பு கொள்வது போலவும் ஒத்திகையில் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்வில் விமானப் படையினா், நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினா், வருவாய்த் துறையினா், தேசிய மாணவா் படையினா், ஊா்க்காவல் படையினா் உள்ளிட்டோா் ஈடுபடுத்தப்பட்டனா். மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த ஒத்திகை நிகழ்வு சுமாா் 30 நிமிடங்கள் நடைபெற்றது.