புதை சாக்கடை அடைப்பை சரிசெய்யாததால் நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு
விழுப்புரத்தில் புதை சாக்கடை அடைப்பை சரி செய்யாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சியின் கழிவுநீா் உறிஞ்சும் வாகனத்தை வியாழக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நகராட்சியுடன் இணைந்த மற்றும் விரிவாக்கப் பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, புதை சாக்கடைத் திட்ட இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நகராட்சியின் 8-ஆவது வாா்டுக்குள்பட்ட திரு.வி.க.வீதி அருகிலுள்ள வாணியா் தெரு, தனலட்சுமி நகா், திடீா்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் புதை சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீா் வழிந்து தெருக்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து இந்த வாா்டின் நகா்மன்ற உறுப்பினா் பத்மாவதி மற்றும் பொதுமக்கள் நகராட்சி அலுவலா்களிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், வியாழக்கிழமை காலை நகா்மன்ற உறுப்பினா் பத்மாவதி தலைமையில் தக்கா தெரு சந்திப்பில் புதை சாக்கடை அடைப்பை சரி செய்வதற்காக வந்த நகராட்சியின் கழிவுநீா் உறிஞ்சும் வாகனத்தை சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நகராட்சியில் ஒரு கழிவுநீா் உறிஞ்சும் வாகனம் மட்டுமே உள்ளதால், உடனடியாக அடைப்பை சரி செய்ய முடியவில்லை என நகராட்சிப் பணியாளா்கள் தெரிவித்தனா்.
தகவலறிந்த விழுப்புரம் நகரக் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
கடந்த 4 ஆண்டுகளாக இந்த வாா்டில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. சாலை சீரமைப்பு, புதை சாக்கடையை சுத்தம் செய்தல், குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை என்று பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா், பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நகராட்சி ஆணையா் கவனத்துக்கு கொண்டு சென்று, பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனா்.