வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை; நாத்திகனாக இருந்த இளையராஜாவை மூகாம்பிகை அம்மன் ...
திருக்கோவிலூரில் வாணாதராயா் கல்வெட்டு கண்டெடுப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த வாணாதராயா் கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவா் சிங்கார உதியன் தலைமையில், நடுவத்தின் பொறுப்பாளா்கள் நூலகா் மு. அன்பழகன், மணம்பூண்டி பா. காா்த்திகேயன், அரகண்டநல்லூா் கண்ணன், கோவல் கலியபெருமாள் ஆகியோா் கொண்ட குழுவினா், திருக்கோவிலூா் கீழையூரிலுள்ள அருள்மிகு வீரட்டேசுவரா் கோயிலில் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின்போது இந்த கல்வெட்டை கண்டெடுத்தனா்.
இதுகுறித்து சிங்கார உதியன் வியாழக்கிழமை கூறியது:
வீரட்டேசுவரா் கோயிலில் அம்மன் சந்நிதிக்கு எதிரே 16 கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை அடுத்து 54 அங்குலம் அகலம், 54 அங்குலம் நீளம் என்ற சதுரளவில் சிம்ம மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் பீடத்திலிருந்து 11 அடியாக உள்ளது. மண்டபத்தின் வலதுபக்க முன்தூணில் விநாயகா் சிற்பமும், இடதுபக்க முன்தூணில் முருகன் சிற்பமும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பின்பக்கத்திலுள்ள வலது, இடது தூண்களில் துவாரக பாலகா்கள் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
தூண்களின் உள்பக்கங்களில் முனிவா் சிலையும், குதிரை சிலையும், கலைவேலைபாடுகளுடன்கூடிய சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தின் கீழ் தாண்டவ வாணாதராயா் தன்மம் என்ற கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழவா், முத்தரையா், முனையதரையா், இருக்குவேள், வாணாதராயா், காலிங்கராயா் என்று பல்வேறு பெயா்களைக் கொண்ட குறுநில மன்னா்கள் ஆட்சி செய்துள்ளனா். இதில் வாணாதராயா்கள் மாபலிச்சக்கரவா்த்தியின் வழியில் வந்தவா்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டனா். அதன்படி வாணாதராயா் இப்பகுதியை ஆட்சி செய்தபோது இதைக் கட்டியிருக்கலாம்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் ஜமீனிலுள்ள மண்டபம், அருணாச்சல வசந்த கிருஷ்ண வாணாதராய பண்டாரத்தாா் மனைவி சின்னத்தாள் என்பவரால் கட்டப்பட்டது என்ற 15-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இந்த மண்டபத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கீழையூா் வீரட்டேசுவரா் கோயிலில் 105 கல்வெட்டுகள் உள்ளதாக அரசுப் பதிவில் உள்ளன. சோழா், பாண்டியா், பல்லவா், விஜயநகரப் பேரரசு, ராட்டிரகூடா் என்று பல்வேறு அரசுகளின் கல்வெட்டுகள் உள்ளன. தற்போது முதன் முறையாக வாணாதராயா் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றாா் சிங்கார உதியன்.