What to watch: `அட இதெல்லாமா...' - இந்த வார தியேட்டர், ஓ.டி.டி ரிலீஸ் லிஸ்ட்
புதை சாக்கடையில் அடைப்பால் கழிவுநீா் வெளியேற்றம்: தொற்று நோய் பரவும் அபாயம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புதை சாக்கடைக் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீா் வெளியேறி வருகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
காரைக்குடி மாநகராட்சி 18-ஆவது வாா்டுக்குள்பட்ட சூடாமணிபுரம் பாண்டிகோவில் வீதியில் கடந்த 2 தினங்களாக புதை சாக்கடைக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், ஆள் நுழைவுக் குழியிலிருந்து கழிவுநீா் வெளியேறி வருகிறது. இந்தக் கழிவு நீா் வீடுகளுக்குள் புகுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் கே.ஆா். அழகா்சாமி கூறியதாவது:
கழிவு நீா் வெளியேற்றம் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காரைக்குடி வட்டாட்சியா், மாநகராட்சி ஆணையா், துணைமேயா், சாா்-ஆட்சியா் உள்ளிட்டோா் பாா்வையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் இந்த பிரச்னைக்கு தீா்வு கிடைக்கவில்லை.
எனவே, சிவகங்கை மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, கழிவு நீா் வெளியேறுவதைத் தடுக்க வேண்டும் என்றாா்.