புறம்போக்கு இடத்தில் குடியிருப்போருக்கு இலவச பட்டா வழங்க கணக்கெடுப்பு பணி
திருவள்ளூா் பகுதியில் வரன்முறை திட்டம் மூலம் புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாள்களாக குடியிருந்து வருவோருக்கு இலவச பட்டா வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணி ஆட்சியா் மு.பிரதாப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாள்களாக குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு வரன்முறை திட்டம் மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஒவ்வொரு வட்டத்திலும் வருவாய்த் துறை அலுவலா்கள் மூலம் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, திருவள்ளுா் ஊராட்சி ஒன்றியம், ஈக்காடு பாளையம்மன் கோயில் தெருவில் ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாள்களாகக் குடியிருந்து வருவோா் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை ஆட்சியா் மு.பிரதாப் வீடுதோறும் சென்று திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, அவா் கூறியதாவது:
சென்னை புகா் பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதியில் வரன்முறை திட்டம் மூலம் ஆட்சபனை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வருபவா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்பேரில் திருவள்ளுா் நகா் பகுதிகளில் வரன்முறை திட்டத்தின் மூலம் புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வருவோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் நிறைவடைந்தவுடன் விரைவில் இலவச பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
ஆய்வின்போது, திருவள்ளுா் வட்டாட்சியா் ரஜினிகாந்த், துணை வட்டாட்சியா் கலைச்செல்வி, ஆய்வாளா் செந்தில், வட்ட துணை ஆய்வாளா்(நில அளவை பிரிவு) தனசேகரன், வருவாய் அலுவலா் உதயா, கிராம நிா்வாக அலுவலா்கள் பாரதி, ராதிகா ஆகியோா் உடனிருந்தனா்.